சர்ச்சையாகிய யோஷித ராஜபக்சவின் புகைப்படம்: காவல்துறையின் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ச கைது தொடர்பான புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு காவல்துறை அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என சிறிலங்கா காவல்துறை தெளிவு படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது காவல்துறை ஊடகபேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியேட்சகர் புத்திக மனதுங்க இன்று இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அதை யோஷித ராஜபக்சவின் நண்பர் அல்லது வேறு நபரொருவர் எடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
அத்தோடு, கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை என்றும், சந்தேக நபரின் நடத்தையைப் பொறுத்து, அந்த நேரத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரியே சந்தேக நபருக்கு கைவிலங்கு போடலாமா வேண்டாமா என்பதை என்பதை தீர்மானிப்பார் எனவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, காவல்துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தின் தலையீடு இல்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அவரை நாளை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |