நூதன முறையில் கோடிக் கணக்கில் மோசடி - முன்னாள் அரசியல்வாதி கைது
அதிகளவான வட்டிகளைத் தருவதாக கூறி ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபா வரை மோசடி செய்த குற்றச்சாட்டிற்காக கெஸ்பேவ நகரசபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் மேலும் குறிப்பிடுகையில்,
”கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் பிலியந்தலை - மகுலுதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய முன்னாள் அரசியல்வாதி என தொியவந்துள்ளது.
இம் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பெண்கள்.” என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
11 முறைப்பாடுகள்
குறித்த பெண்ணுக்கு எதிராக பிலியந்தலை காவல் நிலையத்தில் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் கைது சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பல்வேறு திட்டங்களுக்காக பணம் முதலீடு செய்யப்பட்டதாகவும், இதற்காக பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு 3 லட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக காவல்நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலீடு செய்தவர்கள் பணத்தைக் திரும்ப கேட்ட போது அதனை வழங்க மறுத்து, மிரட்டுவதாகவும் முறைப்பாடுகளில் தொிவிக்கப்பட்டுள்ளது.
