ரவிராஜ் படுகொலை வழக்கில் ராஜபக்சர்களின் முன்னாள் சகாவுக்கு தொடர்பு : கசிந்த அதிர்ச்சி தகவல்
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனக் கிடங்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பியல் மனம்பேரி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் நாரஹேன்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் பியல் மனம்பேரி அப்போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலருடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு கொள்கலன்கள்
இது குறித்து மேலும் தெரியவருகையில், “மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்காக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனம் நாட்டிற்கு முன்கூட்டியே அறிவித்ததாக காவல்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலன் எண்களுடன் கூடிய உளவுத்துறை தகவலின் படி, இந்த இரண்டு கொள்கலன்களும் ஈரானின் தெஹ்ரானில் இருந்து இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் போதைப்பொருள் இருந்ததாகவும் புலனாய்வு தகவலில் குறிப்பிடுகிறது.
இந்த உளவுத்துறை நிறுவனம் இந்தியாவில் இருந்து செயற்படுகிறது என்றும், இதற்கு முன்பு இந்த நாட்டிற்கு வெற்றிகரமான தகவல்களை வழங்கியுள்ளது என்றும் காவல்துறை தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல் கடந்த ஆண்டு இறுதியில் அல்லது இந்த ஆண்டு தொடக்கத்தில் புலனாய்வு அமைப்பால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இரண்டு கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை.
குறித்த தகவலுக்கு அமைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவியுடன், சுங்கத் துறையின் காவலில் உள்ள கொள்கலன்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தி இந்தக் கொள்கலன்களில் ஒரு குறிப்பிட்ட வகை தூளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை சுங்கத் துறை சோதித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மருந்து அல்லது இரசாயனம் இருப்பதை உபகரணங்கள் உறுதிப்படுத்தாததால், கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட மாதிரிகள் அரச ஆய்வாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புலனாய்வு அமைப்பு
இந்தக் கொள்கலனில் என்னென்ன பொருட்கள் கொண்டு வரப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக புலனாய்வு அமைப்பு அவர்களுக்குத் தெரிவித்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த கொள்கலன் இந்த நாட்டில் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் எந்த போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டில் உள்ள தொடர்புடைய புலனாய்வு அமைப்பு அவர்களுக்கு அப்போது தெரிவித்ததாகவும் காவல்துறை தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொள்கலன் இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சுங்கக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றி தற்போது காவல்துறை களப் படைத் தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு தலைமை காவல்துறை ஆய்வாளர், இரண்டு கொள்கலன்களிலும் போதைப்பொருள் இருப்பதாக எண்களுடன் ஐஜிபிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த தகவல் கடந்த ஓகஸ்ட் மாதம் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் தர்ஷிகா குமாரியால் அனுப்பப்பட்டது. அவர் அப்போது களப்படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர், தனக்கு முன்பே தகவல் கிடைத்ததாகவும், இரண்டு கொள்கலன்களும் சோதனை செய்யப்பட்டு எதுவும் கிடைக்காததால் விடுவிக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தெரிவித்துள்ளார். இதன்படி, புலனாய்வு தகவல் தவறானது என்றும் மூத்த அதிகாரி முன்னதாக கூறியுள்ளார்.
எனினும் இதற்கமைய தொடரப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல தலைமையிலான மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு, இந்த இரண்டு கொள்கலன்களும் கெஹெல்பத்தர பத்மேவால் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், ஐஸ் என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்காக இந்த கொள்கலன்களில் இரசாயனங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வெளிப்படுத்தியது.
தடுப்பு காவலில் உள்ள பெக்கோ சமன்
இந்தோனேசியாவிலிருந்து கைது செய்து அழைத்து வரப்பட்டு தடுப்பு காவலில் உள்ள பெக்கோ சமனின் விசாரணையின் போது குறித்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கெஹெல்பத்தர பத்மே இந்த நாட்டில் ஐஸ் என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் பெக்கோ சமன் விசாரணையின் போது கூறியுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு உதவ இரண்டு பாகிஸ்தானியர்களும் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என்றும், உற்பத்திக்குத் தேவையான இரசாயனங்கள் ஈரானில் இருந்து இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இரண்டு கொள்கலன்களும் மித்தெனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பெக்கோ சமன் கூறியுள்ளார்.
இரண்டு கொள்கலன்களையும் விசாரிக்க மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கடந்த வார இறுதியில் மித்தெனியாவிற்குச் சென்றபோது, அவை அவற்றின் இருப்பிடங்களிலிருந்து காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றி தற்போது மர வியாபாரியாகக் காட்டிக் கொள்ளும் பியால் சேனாதீர மற்றும் அவரது சகோதரர் சம்பத் பிரீத்தி விராஜ் மனம்பேரி ஆகியோர், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாக அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபைக்குப் போட்டியிட்டு இரண்டு கொள்கலன்களையும் தங்கள் இடங்களில் இருந்து அகற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில், பத்மே நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி ஆலையை நடத்தி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இருவரும் இரண்டு கொள்கலன்களையும் சுவரால் சூழப்பட்ட ஒரு வெற்று நிலத்திற்கு எடுத்துச் சென்று, அதில் ஒரு குழி தோண்டி, இரண்டு கொள்கலன்களையும் புதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
குறித்த இடத்தை அடையாளம் கண்ட மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை அந்த இடத்தை தோண்டி, புதைக்கப்பட்டிருந்த சில வெள்ளைக் கட்டிகள் போன்ற மாதிரிகளை கண்டுபிடித்துள்ளனர்.
அவை ஐஸ் உற்பத்திக்காகக் கொண்டுவரப்பட்ட ரசாயனங்கள் என்ற சந்தேகத்தை எழுப்பின. இரண்டு கொள்கலன்களிலும் சுமார் 50,000 கிலோகிராம் இராசாயன பொருட்கள் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ரவிராஜ்ஜை சுட்டுக் கொன்ற விவகாரம்
தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் ஆய்வக ஆய்வாளர்கள் அந்த இடத்தில் நடத்திய பரிசோதனையில், 20 மாதிரிகளில் 5 மாதிரிகளில் போதைப்பொருள் பனியின் ஒரு அங்கமான எக்ஸ்டசி இருப்பது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி கண்காணிப்பாளர் உதய குமார உட்லர் தெரிவித்திருந்தார்.
புதைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தோண்டி எடுக்கப்பட்டு, அவற்றை ஆய்வகப் பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த இரண்டு கொள்கலன்களிலும் பொருட்களை புதைத்ததில் ஈடுபட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் சேனாதீர, நேற்று முன்தினம் (06) மதியம் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.
அவரது சகோதரரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அவர் இலங்கை காவல்துறை தரப்பில் பணியாற்றிய அதிகாரி என்றும் கூறப்படுகிறது.
நாரஹேன்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் அப்போது கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அவர் ஒரு உயர் அதிகாரிகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த சந்தேக நபர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலருடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவர் என்றும், சில அரசியல்வாதிகளின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொட்டுக்கட்சி வேட்பாளர் பியல் மனம்பேரியை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று (07) அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
