34 அரச நிறுவனங்களை மூட அல்லது ஒன்றிணைக்கத் திட்டம் - ஜனாதிபதியின் அதிர்ச்சி தகவல்
நாட்டுக்கு நிதிச்சுமையாக உள்ள அரச நிறுவனங்களை மூடுவதற்கு அல்லது ஒன்றிணைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற அரசாங்க அளவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 34 அரச நிறுவனங்களை மூடுவது அல்லது ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதிச் செலவு
அத்தகைய நிறுவனங்கள் மூடப்படும் பட்சத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சில சேவைகளை வழங்குவதற்கு தனியார் துறை முன்வராத காரணத்தினால் அரச நிறுவனங்களை உருவாக்க வேண்டியிருந்ததாகவும், தற்போது நாட்டில் வலுவான தனியார் சந்தை உருவாகியுள்ளதால், இன்றைய காலத்திற்குப் பொருத்தமற்ற நிறுவனங்களை அரச செலவில் தொடர்ந்து பராமரிப்பதற்குப் பதிலாக, தனியார் துறையின் பங்களிப்பைப் பெறக்கூடிய துறைகளை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரிக்குக் கிடைக்கும் வருமானத்தை அடிமட்ட மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்துவதே அரச சேவையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு மேலதிக ஊழியர்களை நியமிப்பதைவிட, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட திறமையான நிர்வாகக் கட்டமைப்பே அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை மூன்று கட்டங்களாக உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டளவில் அரசாங்கம் மேலதிகமாக 330 பில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், 2028ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை அரச சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்குத் தேவையான விசேட கொடுப்பனவுகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வருமானம் அதிகரித்துள்ளதால் திறைசேரியில் நிலவிய நிதி நெருக்கடி தணிந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு கையிருப்பு மீதான அழுத்தம் தொடர்ந்து பாரிய சவாலாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |