150,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய திட்டம்
அடுத்த பெரும்போகத்திற்காக யூரியா இறக்குமதி
150,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் பணிகளை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளதாக இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் கடன் திட்டங்களுக்கு அமைய, குறித்த யூரியா உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த பெரும்போகத்திற்காக தற்போதே திட்டமிட வேண்யுள்ளதாக பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
21,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள் நாட்டுக்கு வரும்
இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ள யூரியா உரம் தாங்கிய கப்பல் கடந்த 11ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பலில் 44,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் அந்த உரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 60,000 மெற்றிக் தொன் யூரியா உரம் கிடைக்கவுள்ள நிலையில், மேலும் 21,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள் நாட்டுக்கு கிடைக்கும் என்று விவசாய அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.