பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உயர்வு - அரச தரப்பு வெளியிட்ட தகவல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனத்தை அரசாங்கம் நிச்சயமாக அதிகரிக்கும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20.08.2025) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் (Palani Thigambaram) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம், தானும் தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவுடன் இணைந்து, இரு அமைச்சுக்களினது அதிகாரிகளை அழைத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம்
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்டதுடன், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனமும் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியினால் பாதீட்டில் முன்மொழியப்பட்டது.
அரசாங்கம் என்ற வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் பலவற்றுடனும் இதுதொடர்பில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நாம் முன்னெடுத்தோம். அதன்போது, வேதனத்தை வழங்குவதில் உள்ள சிரமங்களை அவர்கள் விளக்கியிருந்தனர்.
சில நிறுவனங்களுடன் பிரத்தியேகமாக கலந்துரையாடும்போது, சில அளவுக்கு தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், நாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு, உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். எனவே, இதனை கைவிடாமல் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிற்துறையொன்றை பாதுகாப்பதன் மூலம் தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். அனைவரையும் பாதுகாப்பதற்கான வழிமுறையை ஆராய்வதாகவும், அனைவரினதும் ஒத்துழைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
