ரணில் சந்திப்பில் அசத்திய பிரதமர் மோடி - தமிழர்களுக்கு நற்செய்தி
இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றி சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2 நாள் பயணமாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு நேற்று(20) சென்றுள்ளார். டெல்லியில் இன்று(21) ரணில் விக்ரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்பின் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரம சிங்க ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இதன்போதே பிரதமர் மோடி மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன்போது பிரதமர் மோடி மேலும் கூறியதாவது,
நெருக்கமான நண்பர்
மோடி - ரணில் சந்திப்பு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் |
“ சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தியா வந்துள்ள அவரை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கிறேன்.
இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். இந்த வேளையில் நாம் நெருக்கமான நண்பர் போல் நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் கொடுத்தோம்.
இந்தியா - இலங்கை இடையே விமான போக்குவரத்தை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது இந்தியா - இலங்கை இடையேயான பயணத்தை மேம்படுத்துவதோடு, வர்த்தகத்தையும் வளர்த்து எடுக்கும்.
இந்தியாவின் அண்டை நாடாக உள்ள இலங்கை என்பது நம்முடன் கொள்கை ரீதியாக நெருக்கமாக உள்ளது.
பேச்சுவார்த்தை
இன்றைய பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி, வர்த்தகம் பற்றியும் பேசினோம். இதில் இரு நாடுகளும் பின்னிப்பிணைந்துள்ளதை இருவரும் நம்புகிறோம்.
இலங்கையில் யூபிஐ பணப்பரிவர்த்தனையை அறிமுகம் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதோடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இன்று விவாதித்தோம்.
இதில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வேண்டும் என வலியுறுத்தினேன். அதோடு இலங்கையின் மறுகட்டமைப்பு, சமூக நல்லிணக்கம் பற்றி பேசினோம்” - என்றார்.
