தமிழர் தலைநகரில் சிறப்புற நடைபெற்ற ‘ அகாலத்தின் குரல்’ கவிதை நூல் வெளியீடு
ஐபிசி தமிழ் ஊடக குழுமத்தின் முக்கிய ஊடகவியலாளர்,கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல் எனும் கவிதை நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை(09.03.2025) மாலை 3.30 மணியளவில் திருகோணமலை சம்பூர் பண்பாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
சம்பூர் கலாமன்றம் மற்றும் தமிழ்த்தேசிய இலக்கியப்பேரவை இணைந்து வெளியிட்ட இந்த நிகழ்விற்கு ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களும் கவிஞர்கள் மற்றும் ஐபிசி ஊடக குழுமத்தின் நிறுவுனரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆசி வழங்கிய திருகோணமலை மறைமாவட்ட ஆயர்
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவல் ஆண்டகை அருள்விருந்தினராக் கலந்துகொண்டு ஆசிவழங்கியிருந்தார்.
கவிஞர். க. யோகானநதம் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக கந்தையா பாஸ்கரன் (ஐபிசி ஊடக நிறுவனர்) , கிருபைராஜ் (சிரேஸ்ட விரிவுரையாளர்), இ.திருக்குமாரநாதன் ( மூத்த வழக்கறிஞர்), தீபச்செல்வன் (எழுத்தாளர்)ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தேசத்திற்காய் காவியமான அனைவருக்கும் காணிக்கை
போர்க்கால அனுபவங்களையும், வலிகளையும், இழப்புகளையும், தேசத்தின் போக்கையும், அதன்காப்பையும் தனது வீரியமான எழுத்தால் நிறைத்திருந்த எழுத்தாளரின் கன்னி வெளியீடாக இப்புத்தகத்தை தமக்கான சுதந்திர தேசம் ஒன்றை தந்துவிட வேண்டும் என்ற பெருங்கனவுக்காய் தங்கள் உயிர்களை தியாகம் செய்த அத்தனை உறவுகளுக்கும் காணிக்கையாக்கியிருந்தார் கவிஞர்.
எதிர்பார்க்காத ஆற்றல் படைப்பு
முதன்மைவிருந்தினர் தனதுரையில் தனது ஊடகக் குழுமத்தில் பணியாற்றிய ஒரு சிறந்த படைப்பாளி பிரியங்கன் என்பதையும்,அவரிடம் இவ்வளவு எழுத்தாற்றலும்,வலியும் நிறைந்திருக்கும் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை எனக்கூறியதுடன், தற்கால இளைஞனின் கவிதை வெளியீடு என்பது ஒரு காதல் கவிதை புத்தகமாக அமைந்திருக்கும் என தன் எதிர்பார்ப்பை பிரியங்கனின் எழுத்துப் புரட்டிப்போட்டது எனக் குறிப்பிடார்.
2000 ஆம் ஆண்டு பிறந்த பிள்ளைகள் தமிழ்தேசியத் சிந்தனையுடன் படைப்புகளை வெளியிடுவது பெருமகிழ்வுக்கு உரியதும், எதிர்காலத்தில் எமது போராட்டவரலாறும் தியாகங்களும் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும் எனும் நம்பிக்கை திருப்தி அளிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது ஒப்பற்ற போர்க்கால இலக்கியமாக, வலுவான ஆவணமாகப் பதிவாகின்றது எனவும் குறிப்பிட்டார்.
போர்க்கால இலக்கியத்தில் ஒரு அசைக்கமுடியாத இடம்
கவிஞர் கொட்டிஆரனின் அறிமுகவுரையும், தமிழ்தேசிய இலக்கியப் பேரவையின் செயலாளர் க. அலெக்சனின் வெளியீட்டுரையும் காத்திரமானதாக அமைந்திருந்தது.
அ.சத்தியநாதனின் நயவுரை சபையினைக்கட்டிப்போட்டதுடன் நூலின் கனத்தினையும், காலத்தின் தேவையான கருத்துகளைச் சுமந்திருப்பதையும், போர்க்கால இலக்கியத்தில் ஒரு அசைக்கமுடியாத இடத்தை பிரியங்கனின் அகாலத்தின் குரல் பெற்றுள்ளது எனவும் நயந்தார்.



















நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்