ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதாகி விடுதலையானவர்களிடம் மன்னிப்பு கோரிய காவல்துறையினர்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுதலையாகியிருக்கும் ஹொரவப்பொத்தானை பகுதி முஸ்லிம் இளைஞர்கள் மூவரிடம் ஹொரவப்பொத்தானை காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவர் உயர்நீதிமன்றத்தில் சிங்கள கலாசாரப்படி சிரந்தாழ்த்தி தலைவணங்கி மன்னிப்பைக் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்து சுமார் 06 மாத காலம் தடுத்து வைத்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டோரால் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைகள் மனு நேற்று (01) உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மேற்படி மன்னிப்பு கோரப்பட்டது.
மேற்படி மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட ஹொரவப்பொத்தானை காவல் நிலைய அப்போதைய பொறுப்பதிகாரி ரொஷான் சஞ்சீவ, காவல்துறை அதிகாரி பிரேமரத்ன, சிசிர, ஜயதிலக்க மற்றும் கெப்பித்திகொல்லேவ காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி மன்னிப்பை கோரினர்.
பயங்கரவாத தடைச் சட்டம்
மேற்படி மனுதாரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஹொரவப்பொத்தானை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் மன்றில் தெரிவித்தார்.
தவிரவும் அதில் அவர்கள் முற்றாக விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்களிடம் இனிமேல் மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறாதென்றும் குறிப்பிட்டார்.
மனித உரிமை மீறல்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய தாம் கைது செய்யப்பட்டு 06 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தமது வங்கிக் கணக்குகளில் நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்ததாகவும் மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், பின்னர் தம்மை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுதலை செய்ததால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் தமது மனுவில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |