கப்பம் கோரல்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்
பல கப்பம் கோரல்களில் ஈடுபட்ட நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இருபது நாள் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், மூன்று மாதங்களாகியும் அவர் இலங்கை திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் தென் மாகாணத்தில் உள்ள ஒரு பிரிவில் இருந்து நெடுஞ்சாலை சுற்றுலா பிரிவுக்கு வந்த இந்த அதிகாரி, இருபது நாள் விடுமுறைக்கு அனுமதி அளித்து கடந்த செப்டெம்பர் 15ம் திகதி வெளிநாட்டிற்கு சென்றார். அவர் இதுவரை இலங்கை திரும்பாத நிலையில் அவருக்கு எதிராக மூன்று மனுக்கள் காவல்துறை மா அதிபர்களுக்கு கிடைத்துள்ளன.
விசாரணைகள் பற்றிய தகவல்கள்
எனினும், அவருக்கான உத்தியோகபூர்வ விடுமுறை முடிந்த போதிலும் அவர் இலங்கைக்கு திரும்பாதது தொடர்பான உள்ளக விசாரணையின் போது, இந்த உயர் அதிகாரி தொடர்பில் தென்மாகாண விசேட புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரும்பு வியாபாரியிடம் கப்பம் கோரல்
இந்த அதிகாரி சில காலங்களுக்கு முன்னர் தென் மாகாணத்தின் பிரதான நகரமொன்றில் உள்ள இரும்பு வியாபாரி ஒருவரிடம் 500,000 ரூபா கப்பம் கோரியதாகவும், இது தொடர்பில் அந்த வர்த்தகர் தென்னிலங்கையில் உள்ள பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அரசியல்வாதி இந்த சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை அழைத்து கடுமையாக எச்சரித்த நிலையில் தென் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணத்திற்கு மாற்றப்பட்டார்.
எனினும், குறித்த வர்த்தகர் கப்பம் கோருவது தொடர்பில் தென் மாகாண புலனாய்வு பிரிவினரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும், அதனால் அவர் இலங்கை வருவதை தவிர்த்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |