மதுவால் வந்த வில்லங்கம் காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட சிக்கல்
குருநாகல் பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் குருநாகல் தலைமையக காவல் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் கடமையை பொறுப்பேற்ற அவர் மதுபோதையில் கடமையாற்றியதாக குருநாகல் தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மதுபோதையில் இருந்தமை உறுதி
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியதில் அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
