இளைஞரிடம் தமது கைவரிசையை காட்டிய காவல்துறையினர்! பறிபோன தங்க சங்கிலி
கொட்டாவ - வித்தியால சந்தியில் இளைஞர் ஒருவரின் தங்க நகை மற்றும் கைத்தொலைபேசி கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மாலபே காவல்நிலையத்தில் கடமையாற்றும் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொட்டாவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்களில் சார்ஜன்ட் ஒருவரும் மூன்று கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று கான்ஸ்டபிள்களில் ஒருவர் மாலபே காவல் நிலையத்துக்கு புதிதாக வருகை தந்தவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, கொள்ளையிடப்பட்ட தங்க நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
வழி கேட்கும் போர்வையில் அழைத்து கொள்ளை
கடந்த 20ஆம் திகதி கொட்டாவ வித்தியால சந்தியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த இளைஞர் ஒருவரை, வழி கேட்கும் போர்வையில் அழைத்து தங்கச் சங்கிலி உள்ளிட்ட பொருட்களை சந்தேகநபர்கள் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் கடந்த 21ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மாலபே காவல் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமானது என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

