மட்டக்களப்பில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் : 05 மணிநேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை
மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று சனிக்கிழமை (20) பிற்பகல் 1.00 மணிக்கு திருடிச் சென்ற திருடன் ஒருவரை சிசிரி கமரா மூலம் 5 மணித்தியாலயத்தில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்தில் கடமையாற்றும் முகாமையாளர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை சம்பவ தினமான நேற்று உணவகத்தின் முன்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்
மதிய வேளையில் மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திருட்டு போயுள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து காவல்துறைக்குதெரியப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து மட்டு தலைமையக காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையில் காவல்துறை சாஜன்ட் இலகமே, ரகுமான் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் உணவகத்தில் உள்ள சிசிரி கமராவில் பதிவாகியுள்ள திருடனை அடையாளம் கண்டு கொண்டகாவல்துறையினர் குறித்த திருடனை மாலை 6.00 மணியளவில் கைது செய்ததுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.
குறித்த திருடன் நகரில் சைக்கிள்களை திருடி வந்துள்ளதாகவும் ஏற்கனவே பல முன் குற்றம் கொண்டவர் எனவும் இவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |