அம்பலாங்கொடை வர்த்தகரின் படுகொலை! காரணத்துடன் வெளியான அதிர்ச்சிகர பின்னணி
பதாள உலக குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கிலேயே அவரது மைத்துனரான வர்த்தகர் அம்பலாங்கொடையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் மீட்டியாகொடையில் கரந்தெனிய சுத்தாவின் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாக தகவல்கள் கண்டறிப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை நகரசபையின் பிரதான நூலகத்திற்கு அருகில் நேற்று காலை 10.30 மணியளவில் குறித்த வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கரந்தெனிய சுத்தாவின் கொலை திட்டம்
சம்பந்தப்பட்ட வர்த்தகர் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த சிவப்பு நிற கார், அவரை மோதித்தள்ளிய பின்னர், அதிலிருந்து இறங்கிய துப்பாக்கிதாரி அவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிச்சென்றார்.

இது தொடர்பான தெளிவான காட்சியும் அருகில் இருந்த சிசிரிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த மே 4 ஆம் திகதி மீட்டியாகொட பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய கொலையை கரந்தெனிய சுத்தாவின் தரப்பினர் திட்டமிட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் விதமாகவே அவரது மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தொலைபேசி அழைப்பு
மீட்டியாகொடவில் கொலை செய்யப்பட்ட நபரான மகதும நளினின் மகன் இசுரு, வெளிநாட்டில் இருக்கும் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரின் மகனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்திருப்பதும் மூலம் இந்த விடயம் இன்னும் உறுதியாகியுள்ளது.

அந்த அழைப்பில் இசுரு என்பவர், “நான் தான் உன் தந்தையை கொலை செய்தேன், என் தந்தையை கொலை செய்ததற்காக” என்று கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அம்பலங்கொடை வர்த்தகரின் கொலை திட்டமிட்ட இசுரு அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபரை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |