2000 இலட்சத்துடன் கட்சித் தாவல்..!
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் உள்ளீர்ப்பதற்கான பேரம் பேசுதலை அதிபர் ரணில் செயல்படுத்த ஆரம்பித்துள்ளார் என சமூக மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் எதிரணியை பிளவுபடுத்தி, தேர்தல்களை பின்தள்ளி தனது ஆட்சிக்காலத்தை நீடிக்கப் பார்க்கின்றார்.
இதற்காக எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 2000 இலட்சம் ரூபா வழங்கி தம் பக்கம் இணைப்பதற்காண பேரம் பேசும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் உள்ளகத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
தேர்தலை உரிய முறையில் நடத்துவதற்கோ, நாட்டை கட்டியெழுப்புவதற்கோ பணமில்லை எனக் கூறும் ரணில் - ராஜபக்ச அரசாங்கத்திற்கு இதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவிதமான பேரம் பேசுதலுமின்றி எதிரணியின் பக்கம் இணைய தயாராக உள்ளனர் எனும் தகவலும் ஒருபுறம் கசிய ஆரம்பித்துள்ளது.
இருப்பினும், தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி அடித்துக் கூறுகிறது.
2000 இலட்சம் கொடுத்தாலும், அதற்கு மேல் கொடுத்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சலுகைகளுக்காகவோ, வரப்பிரசாதங்களுக்காகவோ தங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டார்களாம்.
தமக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்களாம்.
முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை உங்கள் பக்கம் இணைத்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம் என ரணில் அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றனர்.
மக்களுக்கு துரோகம் இழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என அக்கட்சி உறுதிபடக் கூறிவிட்டது.
பொறுத்திருந்து பார்ப்போம் பணம் எந்தளவிற்கு தனது செயல்திறனை காட்டப்போகின்றது என்பதை.
2000 இலட்சத்துடன் கட்சித் தாவல் நடைபெறுமா? அல்லது ஐக்கிய மக்கள் சக்தி சொன்னதைப்போல மக்களின் ஆணைக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பளிப்பார்களா? என்பதை வரும் காலங்களில் அறிய முடியும்.
