நிறைவேற்று அதிகாரமிக்க அதிபர் முறைமையால் இந்த நாட்டுக்கு அழிவுகள் தான் அதிகம் ஏற்பட்டது!
"நிறைவேற்று அதிகாரமிக்க அதிபர் முறைமையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு இனியும் ஏற்படாமல் இருக்க, சரியானதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் நிறைவேற்று அதிகாரமிக்க அதிபர் முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு, சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை
தொடர்ந்து அவர்,
நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம், தற்போது நிறைவேற்று அதிகாரத்தை வைத்து கொண்டு ரணிலும் அதைத்தான் செய்கிறார்.
தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலை அறிவிக்கின்றார், ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு ரணில் இல்லை என்கின்றார்.
நான் அதிபராக இருந்திருந்தால், நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழித்து இறுதி நிறைவேற்று அதிகாரமிக்க அதிபராக நானே இருந்திருப்பேன்.
1994 இல் இருந்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அதிபர் வேட்பாளர்களும் நிறைவேற்று அதிகாரமிக்க அதிபர் முறைமையை ஒழிப்போம் என்பது தான், ஆனால் எவரும் அதை செய்யவில்லை.
சரியான அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும், அதன் மூலம் நிறைவேற்று அதிகாரமிக்க அதிபர் முறைமை நீக்கப்பட வேண்டும்.
