தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தவறவிட்ட அரசாங்கம்: சுட்டிக்காட்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர்!
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும், திருவருகைக் காலத் திருமடல் -2025 இல் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. எனினும், தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் நலன்
மேலும் குறித்த மடலில், “இந்தச் சூழ்நிலையில் தமிழர் நலன் சார்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து பற்றுறுதியோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

மன்னார் மறை மாவட்டத்தில் காற்றாலைகளை அமைக்கும் திட்டமும் கனிய மணல் அகழ்வு திட்டமும் பாரிய பிரச்சினைகளாக உள்ளன. மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாடிகளோடு மேலும் 14 காற்றாடிகள் அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
எனினும், எதிர்வரும் காலங்களில் மேலதிகமாக காற்றாடிகள் அமைக்கப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டை அமைச்சரவைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசாங்கம் தந்துள்ளது.எனவே இதனையொட்டி மன்னாரில் இடம்பெற்றுவந்த மக்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
கனிய மணல் அகழ்வு மன்னார் தீவில் முற்றாக இடம்பெறாது என்ற வாக்குறுதியையும் அரசாங்கம் தந்திருக்கின்றது. கனிய மண் அகழ்வுக்கு நிறுவனங்களின் அலுவலகங்கள் மன்னாரில் இயங்க முடியாது எனவும், கனிய மணல் அகழ்வு ஒருபோதும் நடைபெறாது எனவும் அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றவும் அரசு வாக்குறுதி தந்துள்ளது.
அரசு மக்களுக்கு கொடுத்த இந்த வாக்குறுதியை தவறாமல் நிறை வேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
வரலாறு காணாத வெள்ள அனர்த்தம்
முழு இலங்கை நாட்டையும் உலுக்கிய வெள்ள அனர்த்தம் நம்முடைய மறைமாவட்டத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. நம் மக்களில் சிலர் தம் இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக்கப் பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து எண்ணில்லாத பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான விளைநிலங்கள் அழிவுக்குள்ளாகி உள்ளன. கால்நடைகள் பல இறந்துள்ளன.
இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகள் அரசினாலும் நம் மறைமாவட்ட திருச்சபையாலும் ஏனைய சில பொது அமைப்புகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதிப்புக்குள்ளாகாத மக்கள் பெருந்தன்மையோடு உதவிக் கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வரவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என குறித்த மடலில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |