தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் நீத்த தியாகி பொன் சிவகுமாரன் நினைவு தினம்..!
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வீர மரணமடைந்த பொன் சிவகுமாரன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும், படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது.
அந்த நேரத்தில் தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும், சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தவர்.
முதல் தற்கொடையாளி
உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் காவல்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீர மரணமடைந்தவர்.
தமிழர்களின் ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவராவார்.
தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை.
தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின் நிற்கவில்லை.
சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தவர்.
தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய இந்த மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்க, அடிமைத்தனமான வாழ்வு வேண்டாமென எதிர்த்து போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.
யாழ் பல்கலையில்
தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
யாழில்
இன்று தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது ஈகை சுடரேற்றி பொன் சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசியல் வேறுபாடுகளின்றி பல்வேறு தரப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளும் கலந்து கொண்டனர்.












