அமெரிக்கா உட்பட நான்கு நாடுகளுக்கான தபால் சேவைகள் நிறுத்தம்
தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள்
பல நாடுகளுக்கான தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான விமான அஞ்சல் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் தபால் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.
வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை
மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு அஞ்சல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், போதுமான எரிபொருளை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் தபால் போக்குவரத்து நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
