தலைவர் பிரபாகரனின் குடும்பம் சுவீடனில் தலைமறைவு வாழ்க்கை
இந்தியப் படையினர் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் ஈழத்தில் அப்பொழுது இருந்த ஒவ்வொரு தமிழ் குடும்பங்களும் அனுபவித்த துன்பங்களைப் போலவே, விடுதலைப் புலிப் போராளிகளின் குடும்பங்களும், தளபதிகளின் குடும்பங்களும் இன்னல்கள் அனுபவித்து வந்தன.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனது குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.
பிரபாகரனின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் மக்களோடு மக்களாக அகதி முகாமில் இருந்ததும், சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்ததும் பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.
பின்னர் வன்னிக்குச் சென்ற திருமதி மதிவதனியும், குழந்தைகளும் சிறிது காலம் அங்கு தங்கியிருந்தார்கள்.
சுவீடனில் தலைமறைவு
இந்தியப் படையினரின் நெருக்குதல்கள் அதிகமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறித் தப்பிச்செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். திருமதி மதிவதனி பிரபாகரனும், இரண்டு குழந்தைகளும் சுவீடன் நாட்டில் சுமார் ஒன்றரை வருட காலங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
சிறிலங்கா அதிபர் பிரேமதாசவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ‘தேன்நிலவு’ இடம்பெற ஆரம்பித்தத்தைத் தொடர்ந்துதான் பிரபாகரனுடைய குடும்பம் மீண்டும் தாயகம் திரும்பி தலைவருடன் இணைந்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதுவரையில் அவர்கள், அகதிகள் என்றும் அல்லாது, விருந்தினர்கள் என்றும் அல்லாது அச்சங்கலந்த ஒருவித தலைமறைவு வாழ்க்கையைத்தான் அன்னிய நாடுடொன்றில் வாழவேண்டி ஏற்பட்டது.
மைத்துனர் மரணம்
இந்தியப் படை காலத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை துணிவுடன் நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் , மற்றய தலைவர்கள் அனைவரும் அனுபவித்த அதே துன்பங்களையும், இழப்புக்களையும் அனுபவித்தார் என்பதும் இந்த இடத்தில் நோக்கத்தக்கது.
மரணம் புலிகளின் தலைவரது வாசலையும் வந்து தட்டியிருந்தது. தலைவர் பிரபாகரனது மனைவி மதிவதனி அவர்களின் தம்பியின் பெயர் பாலச்சந்திரன். அவரும் ஒரு போராளிதான்.
இந்தியப் படையின் காலத்தில் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் களமிறங்கி சுரசம்ஹாரம் செய்த பல போராளிகளுள் அவரும் ஒருவர். தலைவர் பிரபாகரனுடைய குடும்பம் இந்தியப் படையினருடனான சண்டையின் போது பாலச்சந்திரனை இழக்கவேண்டி ஏற்பட்டது.
வன்னியில் இடம்பெற்ற ஒரு சண்டையில் பாலச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். இந்தப் போராளியின் ஞபகமாகவே பிரபாகரன்-மதிவதணி தம்பதியினருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைக்கு பாலச்சந்திரன் என்று பெயர் சூட்டப்பட்டது.
பாலச்சந்திரன் என்ற நபர் மதிவதணியின் தம்பி என்பதற்காக அல்ல- பாலச்சந்திரன் ஒரு போராளி என்பதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்ள்ஸ் அன்டனி
பிரபாகரன் மதிவதனி தம்பதியினருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ் அன்டனி.
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகாவும், யாழ்பாணத்தில் சிறிலங்காப் படையினருடனான தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டவருமான சார்ள்ஸ் அன்டனி சீலனின் ஞபகமாகவே இந்தப் பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.
சார்ள்ஸ் அன்டனி என்பது ஒரு கிறிஸ்தவப் பெயர். சார்ஸ்ஸ் அன்டனி கிழக்கைச் சேர்ந்த ஒரு போராளி. போராட்டத்தின் போது வீரத்தையும், தேசிய விசுவாசத்தையும் வெளிப்படுத்திய அந்தப் போராளியின் ஞாபகமாக பிரபாகரன் தம்பதியினர் அந்தப் பெயரை தனது மூத்த புதல்வனுக்குச் சூடியிருந்தார்கள்.
துவாரகா
பிரபாகரன்-மதிவதனி தம்பதியின் இரண்டாவது பிள்ளையின் பெயர் துவாரகா. இதுவும் ஒரு போராளியின் பெயர்தான். மதிவதினி அவர்களின் மெய்பாதுகாவலராக இருந்த ஒரு பெண் போராளிதான் துவாரகா.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு சண்டையில் இந்தப் போராளி வீரச்சாவைத் தழுவியிருந்தார். அவரின் ஞாபகமாகவே தமது குழந்தைக்கு துவாரகா என்ற பெயரை சூட்டியிருந்தார்கள்.
வீரமரணமடைந்த போராளிகளை கௌரவப்படுத்தும் புலிகளின் தலைவர் மிகவும் கவனமாகக் கடைப்பிடித்து வந்தார். தனது அனைத்துக் குழந்தைகளுக்கும் மரணித்த போராளிகளின் பெயர்களைச் சூடுவதன் மூலம் வீரமரணமடைந்த போராளிகளை கௌரவப்படுத்தியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் போராட்டவரலாற்றில் முதன்முதலாக மரணித்த போராளியின் ஞாபகமாக மாவீரர் தினத்தை ஏற்பாடுசெய்திருந்தார்.
வருடாவருடம் மாவீரர் தினத்தன்று போராட்டத்தில் மரணித்த அத்தனை போராளிகளையும் தமிழ் உலகமே நன்றியுடன் நினைவுகூறும்படி செய்திருந்தார்.
புதிய கண்டு பிடிப்புக்களுக்கும், வெடி குண்டுகளுக்கும் மாவீரர்களின் பெயர்களையே சூட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் போராளிகள் முண்டியடித்துக்கொண்டு தேச விடுதலைக்காகத் தம்முயிரை தியாயகம் செய்ய முன்வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று ஆய்வாரள்கள் கூறுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் அவர் போராட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாது தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு உதாரண புருஷராக இருந்து வந்ததால்தான் அத்தனை வெற்றிகளையும் அவரால் பெறமுடிந்திருந்தது.
புகைக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது, தகாத உறவு கூடாது என்கின்றதான கட்டுப்பாடுகளை போதனைகளாக மட்டும் செய்துவிட்டு நின்றுவிடாது, தனது சொந்த வாழ்க்கையிலும் அவர் கண்ணியத்துடன் கடைப்பிடித்து வந்தார்.
அவரது தலைமைத்துவ வெற்றிக்கும், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிப் பயணத்திற்கும் இதுதான் காரணம்.
தமிழ்த் தேசியத்தலைவர் என்ற பெயர் அடையாளத்துடன் தமிழ் கூறும் நல்லுலகமே வியந்து அவரை ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே காரணம்.
புலிகளின் தலைவர் வன்னியில் மணலாற்றுக் காடுகளின் மத்தியில் மறைந்திருந்து இந்திய ஆரக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக போராட்டங்களை நெறிப்படுத்திக்கொண்டிருந்த போது பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது.
இடையராத முற்றுகைகள், சகட்டுமேனிக்கு இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுக்கள், பீரங்கித்தாக்குதல்கள் – என்பனவற்றிற்கு அப்பால் பாரிய உளவியல் முற்றுகைக்கும் அவர் உள்ளாகவேண்டி இருந்தது.
தொடரும்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |