தேர்தலை முற்றாகப் பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)
தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் அதிபர்த்தேர்தலில் வாக்களிக்காமல், அதனைப் பகிஷ்கரிப்பதொன்றே தமிழ்மக்களுக்கு இருக்கின்ற தெரிவு எனவும், அதனையே தாம் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கதை தமிழ் அரசியல் களத்தில் ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது. அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள்.
குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் தானாகவே முன்வந்து, அனைத்துக் கட்சிகளும் இணங்கி தனது பெயரை முன்மொழிந்தால் அதனைப் பரிசீலிப்பதற்குத் தயார் என்று கூறியிருக்கின்றார்.
அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஒரு கருத்தையும், மனோகணேசனை பொதுவேட்பாளராக நிறுத்தவேண்டுமென பிறிதொரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகங்கள் இதுபற்றிய எமது நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாகக் கோரிவரும் நிலையில், அதனை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதன்படி எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடியது ஏதேனுமொரு சிங்களத்தரப்பே என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.
இருப்பினும் அது யாராக இருப்பினும், கடந்தகாலங்களில் தமிழர்களுடன் தொடர்புபட்ட அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், பாதுகாப்பு, காணி அபகரிப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம், அரசியல்கைதிகள் விடுதலை, வட-கிழக்கில் பௌத்த சிங்களமயமாக்கம் போன்ற பல்வேறு விடயங்களில் தமிழ்மக்களுக்கு சார்பாக செயற்பட்டதில்லை.
அதேவேளை அரசியல் தீர்வு விவகாரத்தில் அனைவரும் ஒற்றை ஆட்சியையும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தையும் வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றனர் என்றார்.
இது தொடர்பாக மேலதிக செய்திகளை காண ஐபிசி தமிழின் பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |