ஜனாதிபதிக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை
மாலைதீவுக்கு (Maldives) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake), மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவிற்கும் (Dr Mohamed Muizzu) இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நேற்று (28) பிற்பகல் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றன.
மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மகத்தான வரவேற்பளித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு இட்ட பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் உத்தியோகபூர்வ புகைப்படம் பிடிக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
அதன் பின்னர், ஜனாதிபதிக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதன்படி, மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொர்பான ஒப்பந்தம் என்பன பரிமாறப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் மாலைதீவு மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகளிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றங்களைக் கையாள்வதில் பரஸ்பர சட்ட உதவி வழங்குவதை முதலாவது ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டாவது ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையில் இராஜதந்திர பயிற்சி அளிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே தகவல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தங்களை மாலைதீவு சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் மற்றும் இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு ஆகியோர் மாலைதீவுக்கான அரச விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
