நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறினாலும், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
வரிசை யுகம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததும் வரிச்சுமை குறைப்பு, எண்ணெய் விலை குறைப்பு, மின்சார கட்டணம் குறைப்பு மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறியதாகவும், ஆனால் இன்று அதில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளதாகவும், கடவுச்சீட்டு வரிசை கூட குறையவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை
இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்திற்கு ஜனாதிபதி அடிமையாகிவிட்டதாகவும், பெரும் முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விலையை குறைத்துள்ளதாகவும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சாதாரண மக்களுக்காக நிற்பதாக கூறும் ஜனாதிபதி இன்று முதலாளித்துவ வர்க்கத்திற்காக நிற்கின்றார் என சஜித் பிரமதேச மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |