நாடு திரும்பினார் ரணில் - அவசரமாக இடம்பெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ள நிலையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்தை உடனடியாக எடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கைக்கு உதவி வழங்கும் பரிஸ் கிளப் உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ரணில் பேச்சுக்களை நடத்தியிருந்த நிலையில், அடுத்த கட்ட நிதியை பெறுவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை போன்ற நாடுகளுக்குரிய நிதியுதவி தொடர்ந்தும் வழங்கப்படவேண்டும் என பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்தப்பட்ட புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உச்சிமாநாட்டில் ரணில் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அதற்கான பேச்சுக்களையும் முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் பரிஸ் கிளப் எனப்படும் இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்குலக நாடுகளின் நிதி அமைப்பின் உறுப்பினர்களுடனும் சந்திப்புக்களை நடத்திய ரணில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதித்திருந்தார்.
நாடாளுமன்றக் கூட்டம்
இந்த நிலையில், தனது ஐரோப்பிய விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்கான அவசர நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனையடுத்து சனிக்கிழமை இடம்பெறும் விவாதத்திற்குப் பின்னர் அன்றைய தினமே பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர நாடாளுமன்றக் கூட்டம் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று கூடி உள்ளுர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானித்துள்ளது.
