அதிபர் தேர்தலைப் பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்கக்கூடும் : ரோகண ஹெட்டியாராச்சி எச்சரிக்கை
சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பை மீறி அதிபர் தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்கக்கூடும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் அரசியல் கட்சிகளுக்கானதோ அரசாங்கத்திற்கானதோ அல்லது அரசியல் தலைவர்களிற்கானதோ இல்லை தேர்தல்கள் மக்களிற்கானவை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதிபர் தேர்தல் நிச்சயமாக செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் நடைபெறவேண்டும், அதிபரோ அமைச்சரவையோ பசில் ராஜபக்சவோ அதனை மாற்ற முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு
இந்த காலப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்தவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி அதிபர் தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அவர்கள் ஏதாவது காரணத்திற்காக அரசியலமைப்பை மீறி செயற்பட முடிந்தால் வீதிக்கு இறங்குவதற்கான வலு எங்கள் மக்களுக்குள்ளது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் கூறினார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |