சிறிலங்காவின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
சிறிலங்காவின் கொடிய சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கவிஞரான அஹ்னாப் ஜஸீம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் குடிசார் சமூக அமைப்புக்கள் காண்பிக்கும் வலுவான பங்களிப்பை வரவேற்க வேண்டுமே தவிர, அதுகுறித்து எதிர்ப்பை வெளிக்காட்ட கூடாதெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் நபர்களைக் கைதுசெய்வதற்கும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் 18 மாதங்கள் வரை தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்குமான வாய்ப்பை வழங்கக்கூடிய பயங்கரவாத தடை சட்டம் -சித்திரவதைகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுப்பதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கலாகப் பல்வேறு சர்வதேச கட்டமைப்புக்களும் உள்நாட்டு மனித உரிமைகள் மற்றும் குடிசார் சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அதுமாத்திரமன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கடந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தாமல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
