பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்கள் குழம்ப தேவையில்லை - டக்ளஸ் தேவானந்தா
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்கள் குழம்பத் தேவையில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று(31) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள்
பூநகரி, நாகபடுவான் - பல்லவராயன்கட்டு பகுதி மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
பூநகரி - மன்னார் வீதியில் பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.
இதுதொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், "மக்களால் முன்வைக்கப்பட்ட காணி, குடிநீர், மின்சாரம், விளையாட்டு மைதானப் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு பல விடயங்களுக்கு தீர்வுகாணப்பட்டதுடன் சில விடயங்கள் தொடர்பாக கால அவகாசம் கேட்டிருக்கிறேன். அவை விரைவில் செய்து முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம்
இதன்போது பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "புதிதாக உருவாக்கப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டமாகவே இருக்கும்.
இதுதொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து வாதப்பிரதி வாதங்களின் பின்னரே சட்டமாக அறிவிக்கப்படும். எனவே குறித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை" எனவும் தெரிவித்தார்.