கொரோனா கால விருந்து சர்ச்சை -மன்னிப்பு கோரினார் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன்
கொரோனா ஊரடங்கில் பிரதமர் இல்லத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்காக பொறிஸ் ஜோன்சன் மன்னிப்பு கோரினார்.
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் திகதி பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக லண்டன் காவல்துறையினர் அண்மையில் விசாரணையை தொடங்கினர்.
அதுதொடா்பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படாதபோதிலும், முக்கிய தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.
அதில் ஊரடங்கு காலத்தில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது சொந்த கட்சியினரே அவரை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கின்போது விதிமுறையை மீறி பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்காக பொறிஸ் ஜோன்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மன்னிக்கவும். மக்களின் கோபம் எனக்குப் புரிகிறது. நாம் கண்ணாடியில் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். அதே சமயம் இதை சரிசெய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
