சட்டத்தை மீறிய ஆளும் கட்சி எம்.பிக்கள்! தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மீது புதிய மக்கள் முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளது.
குறித்த முறைப்பாடு நேற்று (17) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களான மூத்த பேராசிரியர் சேன நாணயக்கார, மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் M.W.N.U குணசிங்க, மூத்த விரிவுரையாளர் P.D.N.K. பலிஹேன ஆகியோர் முறையாக விடுமுறையைப் பெறாமலும், முறையாக ஓய்வு பெறாமலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய மக்கள் முன்னணி முறைப்பாடு
புதிய மக்கள் முன்னணியின் உப தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க, கட்சியின் கொழும்பு மாவட்ட ஆதரவாளர் சுனில் குமார மற்றும் கொழும்பு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த ருக்மன் டி சில்வா ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய மக்கள் முன்னணியின் உப தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க,
“2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் சேன நாணயக்கார, M.W.N.U குணசிங்க, P.D.N.K. பலிஹேன ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
அரசியலமைப்பை மீறிய செயல்
அவர்கள் முறையாக விடுமுறையைப் பெறவில்லை அல்லது முறையாக அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவில்லை என்பதால், அரசியலமைப்பை மீறி இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டமை சட்டவிரோதமானது.
இந்த சட்டவிரோதமான செயல் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
