வெளிநாடொன்றிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கைதிகள்!
குவைத்(Kuwait) நாட்டில் தண்டனை அனுபவித்து வந்த 104 இலங்கை கைதிகளில் 32 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த கைதிகள் இன்று (25) பிற்பகல் குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த கைதிகள் குவைத் அரசின் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
குவைத் அரசுக்கும் இலங்கைக்கும் இடையில் 2007 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
குவைத் இராச்சியத்தில் போதைப்பொருள் பாவனை, வர்த்தகம் , மோசடி மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இலங்கைக் கைதிகள் சிலரே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த கைதிகளுடன் குவைத் அரசின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பிய கைதிகள்
அத்துடன், குவைத் விமானப்படைக்கு சொந்தமான விமானம் இன்று (25) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததையடுத்து, இந்த கைதிகளை பொறுப்பேட்க இலங்கை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் குழுவும் வருகை தந்திருந்தது.
இதனையடுத்து, நாடு திரும்பிய கைதிகள் குழு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |