தீர்ப்பு மீறப்பட்டுள்ளது: மனித உரிமை ஆணைக்குழுவை நாடிய தனியார் பேருந்து சங்கத்தினர்
மேல் மாகாணத்திற்குள் பயணிகள் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிக்கும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, பேருந்து தொழில்துறையினருக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வந்த வழித்தட அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடைமுறையை, இம்மாதம் முதலாம் திகதி முதல் மாதாந்தம் மேற்கொள்வதற்கு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தீர்மானத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரவித்துள்ளார்.
தீர்ப்பு மீறப்பட்டுள்ளது
அவர் மேலும் தெரிவித்ததாவது, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் நீடித்து வருகிறது.

இதற்கு எதிராக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் சுமார் 10 முதல் 12 வருடங்களுக்கு முன்னர் பெற்ற தீர்ப்பு ஒன்று உள்ளது. அது தொடர்பான தீர்ப்பு தற்போது மீறப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு செல்லாமல் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளோம். இதற்குச் சாதாரண நீதி கிடைக்க வேண்டும். ஏனென்றால், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், வருடத்திற்கு நீடிக்கப்பட வேண்டிய வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் நீடிக்கின்றனர்.
எனவே, இது ஒரு பாரியதொரு சிக்கலாகும். மாதாந்தம் இதை நீடிக்கும்போது, எப்படி ஆவணங்களைத் தயாரித்து மாதாந்தம் வழங்க முடியும்? அதேபோல வருமான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதும் வருடத்திற்குத்தான்.
அநீதியான செயற்பாடு
அதேபோல காப்புரிமை சான்றிதழ் வழங்குவதும் வருடத்திற்குத்தான். அப்படியாயின் இந்த வழித்தட அனுமதிப்பத்திரம் மட்டும் மாதாந்தம் எப்படி நீட்டிக்கப்படுகிறது? நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தும், இது மிகவும் அநீதியான செயற்பாடாகும்.

இதனால் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அனைவரும் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |