சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்
நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்குபற்றுதல்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சர்வகட்சி அரசாங்கத்திற்கான பணிகளை அந்தக் குழு முன்னெடுக்குமெனவும் அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும், அரச தலைவருக்குமிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக, தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதன் முதற்கட்டமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, கட்சிப் பிரதிநிதிகள் முன்வைக்கும் பொதுத் தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் தாம் அதற்கு இணங்குவதாக அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் ஐந்து பேரை பெயரிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன உட்பட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்றதன் பின்னர், முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
