யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக 42ஆவது மாதமாக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் 42 ஆவது மாதமாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.
அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (24.10.2026) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்றும் (25.10.2026) இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகள்
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், தென்னிலங்கையில் பௌத்த பிக்குமார் நடத்திய போராட்டத்தின் போது, "இலங்கையில் ஒரு சட்டம் தான் இருக்கிறது, சட்டத்திற்கு முன்னால் யாவரும் சமம்" என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆனால், இதற்கு முரணாக வடக்கில் தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.
இலங்கையின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றால், தென்னிலங்கையில் உள்ளது போன்றே வடக்கிலும் சட்டம் இருக்க வேண்டும். சட்டத்தை மீறி தமிழர்களின் காணிகளில் கட்டப்பட்டுள்ள இந்த விகாரை மற்றும் கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் வெவ்வேறான சட்டங்களைக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டவிரோத கட்டுமானங்களை முற்றாக அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், கனகரட்ணம் சுகாஸ், காணி உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்ச
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |