ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி 9ஆவது நாளாக தொடரும் போராட்டம்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, பிக்குகள் குழுவொன்று முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஒன்பதாவது நாளாக இன்றும் (24) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தநிலையில், விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்ற முடியாது என கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (23) தெரிவித்தார்.
சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனு
குறித்த உத்தரவை நீக்குமாறு கோரி பிக்குகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவு வாசித்துக் காட்டப்பட்ட பின்னரும் குறித்த பகுதியில் சிலர் தொடர்ந்து தங்கியிருப்பதால் அவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணைகளைப் பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவையும் நீதவான் நிராகரித்தார்.

இதற்கிடையில், ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட பேரணி தொடர்பான வழக்கில், பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட சில பிக்குகள் அந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை என்றால், அதனை மேல் நீதிமன்றத்துக்கு அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று உத்தரவிட்டார்.
குறித்த பேரணியில் கலந்துகொள்ளாத சில பிக்குகளின் பெயர்களும் கோட்டை காவல்துறையினரால் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக, அவர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு
இந்தப் பின்னணியில், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தங்கியிருந்த பிக்குகளுக்கு எதிராகப் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவில் இடம்பெற்ற சில பெயர்களை நீக்குவதற்கான தீர்மானம், திட்டமிட்டு இழைக்கப்பட்ட பாரிய தவறு என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற உத்தரவில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த சில பிக்குகள் குறித்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

முதலில் பெயர்களைச் சேர்த்துவிட்டு பின்னர் அவற்றை நீக்கியமை, நீதிமன்றத்தைத் திட்டமிட்டு தவறாக வழிநடத்தும் செயல் எனவும், அரசாங்கம் பௌத்த மதத்துக்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராகத் தொடர்ந்து செயற்பட முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேற்று வருகை தந்த உலப்பனே சுமங்கல தேரர், எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |