மிரட்டப்பட்டே ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்துச் வரப்பட்டோம்- மட்டக்களப்பில் அச்சம் வெளியிடும் அதிபர்களும் ஆசிரியர்களும்!!
இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தாம் மிரட்டப்பட்டே ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்துவரப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் இரகசியமாகத் தெரிவித்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவென வந்த ஆசிரியர்கள் எவரும் கோசங்கள் எதுவும் எழுப்பாமல், ஆர்பாட்டங்கள் எதுவும் செய்யாமல் சிரித்துப் பேசியபடி அங்கு நின்றுகொண்டிருந்ததாக எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.
“போகச் சென்னார்கள்.. வந்தோம்.. போகாதுவிட்டால் பிரச்சனை, அழுத்தங்கள் தருவார்கள்..வேறு வழியில்லை. எல்லாம் மேலிடத்தின் உத்தரவு.. செய்துதான் ஆகவேண்டும்..” என்று கூறினார் ஒரு ஆசிரியை.
இன்றைய தினம் மட்டக்களப்பு ஆசிரியர்சங்கப் பிரமுகர் உதயரூபன் என்பவருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தங்களை மிரட்டி வற்புறுத்தியே அழைத்துச் சென்றதாக கலந்துகொண்ட ஆசிரியர்கள், அதிபர்களில் சிலர் தெரிவித்திருந்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு அதிபர் இதுபற்றித் தெரிவிக்கும்போது, ‘வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் குறிப்பிட்ட இந்த ஆசிரியர் சங்கப் பிரமுகரான உதயரூபனுக்கும் இடையில் ஏற்கனவே தனிப்பட்ட விரோதம் உள்ளது. பணிப்பாளரின் கணவனால் முன்னர் ஒருதடவை உதயரூபன் பகிரங்கமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம்.
கடந்த புதன்கிழமை ஆசிரியர்களின் இடமாற்றம் சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளைச் சாதமாகவைத்து தனது தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக்கொள்வதற்காக வலயக் கல்விப் பணிப்பாளரினாலேயே இந்த ஆர்பாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டேயாகவேண்டும் என்று மட்டக்களப்பு வலய பாடசாலைகளின் அதிபர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். கலந்துகொள்ளாதுவிட்டால் உங்கள் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் தரமாட்டேன். தனித்து விடப்படுவீர்கள்.. என்று மிரட்டப்பட்டார்கள்.
வலயக் கல்விப் பணிப்பாளர் நேரடியாகவே எங்களை மிரட்டினார். அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகள் கூட சில அதிபர்களிடம் இருக்கின்றன. பழிவாங்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் காரணமாக அதனை வெளிப்படுத்தமுடியாமல் இருக்கின்றது’ என்று தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு ஆசிரியர் தெரிவிக்கும் போது, ‘பிரதி அமைச்சராக இருக்கும் ஆயுதக் குழு தலைவரது நெருங்கிய தோழிதான் தற்போதைய வலயகக் கல்விப் பணிப்பாளர். அதனால் அடங்கி, அச்சத்துடன் நடந்தேயாகவேண்டிய தேவை எம்போன்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கவே செய்கின்றது. ‘வா’ என்றால் வரவேண்டும்.. ‘போ’ என்றால் போய்த்தானாகவேண்டும்.. இது எமது தலைவிதி’ என்று தெரிவித்தார்.
‘தற்போதைய மட்டக்களப்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்தான் கிழக்கு மாகாணப் பணிப்பாளரும் கூட. கிழக்கில் இன்று எத்தனையோ தகுதிவாய்ந்த எஸ்.எல்.ஈ.எஸ். பட்டதாரிகள் இருந்தும், இரண்டு பதவிகளை ஒரு நபருக்கே வழங்கும் அளவுக்கு பல உயர் இடங்களில் செல்வாக்குப் பெற்றவர்தான் அந்த அதிகாரி. வேலை வேண்டும்.. சம்பளம் வேண்டும் என்றால் சொன்னதைச் செய்துதான் ஆகவேண்டும். மட்டக்களப்பு தமிழ் மாணவர்களுக்கு சுயமாய் வாழ்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கவேண்டிய நாங்கள், சுயமாக முடிவுகூட எடுக்கமுடியாது இருப்பதையிட்டு வெட்கமாக இருக்கின்றது’ என்று தெரிவித்தார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றொரு ஆசிரியர்.
கிழக்கை சுபீட்சமாக்கவேண்டும் என்று முகப்புத்தகத்தில் வீரம் பேசுகின்ற மண்ணின் மைந்தர்கள், மட்டக்களப்பு ஆசிரியர்கள் மீது வழங்கப்படுகின்ற இதுபோன்ற அழுத்தங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவேண்டும் என்று கோருகின்றார்கள் கையறுநிலையில் இருக்கின்ற தமிழ் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும்.