இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்....
ஈழத்து தாய்மார் என்றவுடன் நம் எல்லோரின் கண்களின் முன்னும் வந்துபோகும் உருவம் வீதிவீதியாக தமது உறவுகளை தொலைத்துவிட்டு தேடி அலையும் தாய்மார்களின் முகங்கள் தான்.
அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் வலிகளில் அவர்களும் ஓர் அங்கமாகி விட்டார்கள்.
தமது உறவுகளை தொலைத்து அவர்களை வலிந்து காணாமல் ஆகச்செய்த அரச இராணுவம் அதன் ஒட்டுக் குழுக்களுக்கும் கூட அவர்கள் இன்றுவரை பெருந்தலையிடி என்றே கூறிக்கொள்ளலாம்.
யார் தான் விமர்சிக்க முடியும்
2500 நாட்களைக்கடந்து தமது உறவுகளுக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் சுழற்சி முறையில் உண்ணாவிரதமிருந்து நீதியை வலியுறுத்தி வந்தவர்கள் அவர்கள்.
ஆனால் அவ்வப்போது அரசியல் சாயத்தைப் பூசிக் கொண்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், எமது தாயகப் பிரதேசத்திலும் சரி ஈழத்தமிழர்களிடத்திலும் இப்படியாக நீண்ட தொடர்போராட்ட இயங்கியலை யாருமே கொண்டிராததாலும், அதேநேரம் அவர்கள் கண்ணீரோடு தேடிக்கொண்டிருப்பது எமது தேசத்தின் வேர்களாக எம்மைக் காத்து நின்ற உன்னதமான மறவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை தேடித்தேடி தமது பொழுதுகளை கழித்துக்கொண்டுருக்கும் அவர்களை யார்தான் விமர்சிக்க முடியும்.
அப்படி விமர்சிப்பவர்கள் தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்தாக வேண்டும். அல்லது அவர்கள் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எம் ஒவ்வொருவரிடத்திலும் இருந்துகொண்டே இருக்கிறது.
அந்த அளவுக்கு கௌரவத்தோடு நோக்கப்படவேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்கவேண்டிய அந்த தாய்மாரின் கலப்பில்லாத அந்த போராட்டம் இன்று என்ன நிலையில் இருக்கிறது.
சந்தி சிரிக்கிறது போராட்டம்
ஆமை புகுந்த வீடு என்னவோ ஆகும் என்று சொல்லுவார்களே அப்படியாக சந்தி சிரிக்கிறது போராட்டம்.
அந்த தாய்மாரியே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர்களாலோ அல்லது சலுகைகளுக்கும் சன்மானங்களுக்குமாக விலைபோனவர்களோ இன்று நாலுபேர் சிரிக்குமளவிற்கு அழைத்து வந்து விட்டிருக்கிறர்கள்.
இவ்வளவு நாளும் இங்கு நிகழ்ந்த சிலவற்றை கண்டும் கடந்துபோனவர்கள் இன்று நிலைமை கை மீறி போய் விட்டதோ என எண்ணுமளவிற்கு மாறியிருக்கிறது.
“முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தின் போது இவர்களிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது, அங்கிருந்தவர்கள் அதனை சமாளித்துக்கொண்டனர்.
ஊடகங்களும் அதனை பெரிதுபடுத்தாது விட்டுச் சென்றது. ஆனால் இன்று வவுனியாவில் தங்களுக்குள் மோதிக்கொண்டவர்கள் காவல் நிலையம் வரை செல்லாது தவிர்த்து இருக்க வேண்டும்.
அவ்வாறு சென்றிருந்தாலும் காவல் நிலையத்தில் சமாதானமாகி விலகிச் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் போராட்டங்கள் எங்கும் காவல்துறையினரின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்கள் இன்று அதே காவல்துறையினரிடம் சென்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி முறையிடுகிறார்கள்.
எந்த காவல்துறையினர் எங்கள் போராட்டத்தை நசுக்குகின்றார்கள், எங்களை அச்சுறுத்துகிறார்கள் என் குற்றம் சாட்டி நின்றோமோ, அதே காவல்துறையினரிடம் சென்று எமக்குள் மாறி மாறி குற்றம் சாட்டி முறையிட்டு நிற்கிறோம்.
தயவு செய்து பிரச்சினைகளை உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உறவுகளை இழந்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்.
ஒரு வேளை அந்த உறவுகள் இன்று நீங்கள் பிணக்குத் தீர்க்கச் சென்றிருக்கும் சிறிலங்க அரச இயந்திரத்தால் ஏனையவர்களைப் போலவே படுகொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களின் அந்த புனித ஆத்மா அவர்கள் பட்ட வலிகளையும் மறந்து கண்ணீர் வீட்டு ஓவென்று அழும்.
உங்கள் இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
எமது தேசத்திற்காக தங்களை தியாகதித்த அந்த புனிதர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
நாங்கள் சிறிலங்கா அரசிடம் நீதிகேட்டுப் போராடவில்லை. அவர்கள் நிகழ்த்திய அநீதிகளுக்காக நீ்திகோரிப் போராடியவர்கள்” எனச் சிலர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.