தமிழ் மக்களின் வலிகள், நியாயங்களை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிராக தென்னிலங்கையில் இடம்பெறும் சிங்கள மக்களின் போராட்டங்களை தமிழ் மக்கள் புரிந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு, தமிழ் மக்களின் வலிகளையும் நியாயங்களையும் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, அதனால் எழுந்துள்ள போராட்டங்கள் தொடர்பாக நேற்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைத்தீவு மிக அண்மைய நாட்களில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றது. தென்னிலங்கை சிங்கள மக்கள் இந்த நெருக்கடிக்கு எதிராக மாபெரும் எழுச்சியுடன் போராடி வருகின்றனர்.
தென்னிலங்கை மக்களின் இந்த எழுச்சியின் நியாயத்தை கடந்த காலங்களில் பேரவலத்தை சந்தித்த இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாங்கள் புரிந்து கொள்கின்றோம், உணர்ந்து கொள்கின்றோம், மதிக்கின்றோம்.
இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமான தமிழ் மக்கள் மீது காலங்காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய அடக்கு முறைகள் இதுவரை பாராமுகமாகவே தொடர்ந்து வருவது வேதனைக்குரியது.
இத்தருணத்தில் சிங்கள மக்கள் தமிழ் மக்களாகிய எங்களது வலிகளையும் நியாயங்களையும் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்.
உங்களை புரிந்து கொள்கின்றோம் - எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக இருக்கின்றது என்பதை ஒருங்கிணைத்த தமிழர் கட்டமைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது. – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
