காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரி இன்றும் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி அவர்களின் உறவினர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாட்டில் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஈடுபட்டுள்ளதாக உறவுகள் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.
வவுனியா
சர்வதேசத்தின் நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 இற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என அவர்களின் குடும்பத்தையும் ஏமாற்றுகின்றது போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெக்கப்பட்டது.
2101 ஆவது நாளாக குறித்த போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், இன்று காலை 10.30 அளவில் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு இடம்பெற்றது.
இதன்போது, சர்வதேசம் தமக்கு நீதி வழங்க வேண்டும் என மக்கள் கோஷம் எழுப்பினர்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
