வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு
இலங்கையில் இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து, அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரும் பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான காமினி லொக்குகே (Gamini Lokuge) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே தேர்தலை நடத்த தமது அரசாங்கம் முனைப்பு காட்டுவதாக தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் விசனம் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“அடுத்த வருடத்தில் அரசியலமைப்புத் திருத்தம் இடம்பெற்றால் தேர்தல் வரும் என நினைக்கிறேன். அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முடியும் என நம்புகிறேன். தற்போதும் குறித்த குழு பேச்சுக்களை நடத்திவருகின்றது.
தேர்தலை நடத்த இந்தியாவின் நோக்கமோ அழுத்தமோ காரணமாகவில்லை. முன்னர் ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் இந்து-லங்கா ஒப்பந்தத்தின் ஊடாகவே மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. இன்று அப்படியான பிரச்சினையில்லை.
மாகாண சபை முறையை நீக்கும்படி கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு வடக்கிலும் உள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஆதரவாகவே வாக்களித்தன. வடக்கில் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைக்கு தான் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.
அப்போது அதில் அரசாங்கம் தோல்வியடையும் என நினைத்தாலும் தேர்தலை அரசாங்கம் நடத்தியது. மக்கள் பிரதிநிதிகளுடனான மாகாண சபை அவசியம் என்பதை மஹிந்த ராஜபக்ஷ நினைத்தார்.
அதன்படியே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டதில் முதலமைச்சர், அவைத்தலைவர் என பலரும் தெரிவாகினார்கள். அரசாங்கத்துடன் இணங்காமலும் அவர்கள் செயற்பாட்டார்கள்.
பிரச்சினைகள் பற்றி பேச்சும் நடத்தப்பட்டது.
மறுபக்கத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கும் அவர்கள் விரும்பினார்கள். ஆகவே இன்று இந்தியாவின் அழுத்தம் பற்றி பேசுகின்றார்கள்” என்றார்.
