பயங்கரவாதத் தடைச் சட்ட 'திருத்தத்தை' இரண்டாம் வாசிப்பிற்கு முன்வைக்க அனுமதி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின், திருத்தச் சட்டமூலத்தை இரண்டாவது வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் கடந்த 11ஆம் திகதி கூடிய குழு தமது தீர்மானத்தை அறிவித்துள்ளதாக, நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின், திருத்தச் சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால், இரண்டாம் வாசிப்பிற்கு குறித்த சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் கூடிய சட்டமூலத்துக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த அறிக்கையை அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நீதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக, மதுர விதானகே, சுரேன் ராகவன், சரித ஹேரத், இசுறு தொடங்கொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
