கடும் நெருக்கடிக்குள் அரசாங்கம் - பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து பகிரங்க விவாதம் நடாத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“அரச தலைவர் பதவி கேட்டு அதனைப் பெற்றுக்கொண்டார்கள், அரச தலைவரின் அதிகாரம் போதவில்லை என 20ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வந்து அதிகாரம் விஸ்தரிக்கப்பட்டது.
பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையென்று கோரப்பட்டது. அதுவும் வழங்கப்பட்டது. அதன் பின் அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்சவை அரசியல் அமைப்பு திருத்தங்களின் மூலம் நிதி அமைச்சராக நியமித்துக்கொண்டனர்.
இதனை விட எதனையும் மக்களினால் கொடுக்க முடியாது. எனினும் இன்னும் நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை. நாட்டு மக்கள் எதிர்ப்பார்ப்பு இழந்து காணப்படுகின்றனர்.
இதனால், பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த நாம் தயார்.
சிவில் அமைப்புக்கள்,ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒரே இடத்தில் அமரச் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவாதம் ஒன்றை நடாத்த வேண்டும்” என்றார்.
