அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்! வெளியாகிய தகவல்
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐந்து நாட்களும் வேலைக்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துச் செலவு அதிகம்
மேலும், அரச ஊழியர்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கும் நிவாரணம் வழங்க தலையீடு செய்வதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வாரத்தின் ஐந்து நாட்களும் பணிக்கு சமூகமளிக்கும் போது போக்குவரத்துச் செலவு அதிகமாக காணப்படும் நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய போது அதற்கு நல்ல பதிலொன்று கிடைத்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

