2025 ம் ஆண்டுக்குள் சகலருக்கும் தூய குடி நீர் வழங்கப்படும் - வாசுதேவ நாணயக்கார
2025 ம் ஆண்டுக்குள் சகலருக்கும் தூய குடி நீர் வழங்கும் வேலைத் திட்டம் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயல மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் உறுதி மொழி வழங்கப்பட்ட விடயங்கள் நிரந்தரமாக பிழையின்றி உரிய முறையில் மேற்கொள்ளப்படும். எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை இணைப்புக்களைப் பெறாத பிரதேசத்துக்கு குடி நீர் இணைப்பு வழங்கப்படும்.
தொடர்ச்சியாக நீரை மக்களுக்கு வழங்கும் வகையிலான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அவை எதிர்வரும் காலங்களில் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா நிலைமை காரணமாக நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக நீர்க்குழாய் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது இதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதுடன் அதற்கான உரிய நிலவரம் தற்போது தோன்றியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது அதனை தெளிவுபடுத்துவதன் மூலம் மக்களுக்கான பிரச்சினைகளை இதன் மூலமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீரின் கொள்ளளவை அதிகரித்தல் மூலமே புதிய பல இணைப்புக்களை வழங்க முடியும் மேலும் இதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுவரையும் நீரிணைப்புக்கள் இன்மையால் காணப்படும் கோமரங்கடவெல ,பதவிசிரிபுர, மொறவெவ ஆகிய பிரதேங்கள் தொடர்பில் தவிசாளர்களால் அமைச்சரிடத்தில் சுட்டிக்காட்டினர்.
இதன் போது பதிலளித்த அமைச்சர் நீரினைப்பு இல்லாத கஷ்டப்படும் அவ்வாறான பிரதேச மக்களுக்கு குடி நீர் தாங்கிகளை கடன் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றார்.
2025ம் ஆண்டளவில் 92 வீதமான பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் சேவைகளை வழங்க முடியும் எனவும் இதன் போது நீர் வழங்கல் சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் என்.சுதேசன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துகோரள , மேலதிக அரசாங்க அதிபர் பி.ஆர்.ஜயரட்ண ,திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள், நீர் வழங்கல் சபையின் பிரதேச பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.




