இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள் - மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக்கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
கடந்த ஓக.,1ல் கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலில் நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும். இந்த சம்பவம், தமிழகத்தில் குறிப்பாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.
பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கும் இந்த பிரச்னைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.