விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எண்ணமில்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புடின்
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை அதிபர் புடின் கூறியிருந்தார்.
அண்மையில், ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், ரஷ்ய பொறியாளர்கள் விண்வெளிக்கு அனுப்புவதற்கான அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரம் உறுதியாக நம்புவதாக செய்தி வெளியாகி அனைவரையும் பீதியில் ஆழ்த்தியிருந்தது.
மேலும், அந்த அணுவாயுதம் விண்வெளியிலுள்ள செயற்கைக்கோள்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா ரஷ்யா மீது குற்றம் சுமத்தியது.
ஆயுதங்களை நிலைநிறுத்தக்கூடாது
தவிரவும், விண்வெளியில் அணு ஆயுதம் உட்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா உள்பட 130 இற்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியது.
அந்த ஒப்பந்தத்தினை மீறி, விண்வெளி திட்டங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா செயற்பட்டு வருவதாகவும், அமெரிக்கா ரஷ்யா மீது குற்றங்களை அடுக்கி வருகிறது.
ரஷ்யா மறுப்பு
விண்வெளிக்கு அணுவாயுதத்தினை செயற்கைகோள் வடிவில் அனுப்பவுள்ளதாக கூறிய அமெரிக்கா அது எந்த வகையானது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை, ஆனால் அது அணுஆயுதம் சார்ந்தது என்ற தகவலை பரப்பி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டை பகிரங்கமாக ரஷ்யா மறுத்துள்ளது, இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது, வெளிப்படையானது விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |