திடீரென உக்ரைனுக்கு சென்ற புடின் - கள நிலைமைகள் குறித்து ஆராய்வு
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களுக்கு அதிபர் விளாடிமிர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கெர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்ய படைகள் நவம்பர் மாதம் அங்கிருந்து பின்வாங்கத் தொடங்கின. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய இராணுவ தலைமையகத்திற்கு சென்ற புடின், கள நிலவரம் குறித்து படைத் தளபதிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகின்றது.
கள நிலைமை குறித்து ஆராய்வு
இந்த விஜயம் ஏப்ரல் 17ஆம் திகதி இடம்பெற்றதாக புடினின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
ரஷ்ய தலைவரின் இத்தகைய பயணங்கள் அரிதானவை, இருப்பினும் அவர் மார்ச் மாதம் மரியுபோல் நகருக்கு திடீர் விஜயம் செய்தார்.
இதேவேளை புடினின் வருகைகள் பற்றிய செய்திகளுக்கு பதிலளித்த உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கியின் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக், ரஷ்ய தலைவர் உக்ரைனின் "ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் பாழடைந்த பிரதேசங்களுக்கு" "கடைசி முறையாக தனது கூட்டாளிகளின் குற்றங்களை அனுபவிக்க" சுற்றுப்பயணம் செய்கிறார் என்று ட்வீட் செய்துள்ளார்.
