பிரித்தானிய மகாராணி காலமானார்
பிரித்தானிய மகாராணி உயிரிழந்துவிட்டதாக பக்கிம்காம் அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பால்மோராவில் உடல்நிலை மோசமானதை அடுத்து சிகிச்சை பெற்று வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் இன்று காலமானார்.வியாழனன்று ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்கொட்டிஷ் தோட்டத்தில் கூடினர்.
ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், புதிய அரசராகவும், 14 கொமன்வெல்த் நாடுகளுக்கு தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் ராணியை மருத்துவக் கண்காணிப்பில் வைத்த பிறகு, ராணியின் குழந்தைகள் அனைவரும் அபெர்டீனுக்கு அருகிலுள்ள பால்மோரலுக்குப் பயணம் செய்தனர்.
ராணியின் பேரன், இளவரசர் வில்லியம், அவரது சகோதரர் இளவரசர் ஹரியுடன் அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ராணியின் உடல்நிலை மோசம் - பிரித்தானியாவில் இனம்புரியாத சோகம்
பிரித்தானியாவில் இனம்புரியாத சோகம்
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியாவில் இனம்புரியாத சோகம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் தமது பிரார்த்தனை செய்திகளை வெளியிட்டுவரும் நிலையில் ராணியின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் யாவரும் ராணி தங்கியுள்ள பல்மோரல் கோட்டைக்கு அவசரமாகச் சென்றுள்ளனர்.
உடல்நிலை குறித்து கவலை
நேற்று முதல் உடல்நிலையில் பாதிப்பை சந்தித்த ராணியின் உடல் நிலை இன்று பரிசோதனை செய்யப்பட்டபோது உடல்நிலை குறித்து கவலை கொண்ட மருத்துவர்கள், அவரை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
பல்மோரல் கோட்டைக்கு விரைவு
96 வயதான ராணி, நேற்று காணொளி வாயிலாக இடம்பெற்ற கூட்டத்தில் இருந்து வெளியேறியபின்னர் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த செய்தியை அடுத்து ராணியின் அனைத்து பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் ராணி தங்கியுள்ள பல்மோரல் கோட்டைக்கு வான்மார்க்கமாக சென்றுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் தமது பிரார்த்தனை செய்திகளை வெளியிட்டுவரும் நிலையில் பல்மோரல் கோட்டை முன்னால் பலர் கூடிவருகின்றனர். ராணியின் உடல் நிலை குறித்த செய்தியால் பிரித்தானியாவில் இனம்புரியாத கவலை ஏற்பட்டுள்ளது.
பக்கிங்காம் அரண்மனையில் இடம்பெறும் பாதுகாவலர்களின் அணிவகுப்பு மீளெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் குடியேற்ற நாடுகளான பொதுநலவாய நாடுகளிலும் இந்த செய்தி உற்றுநோக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கிடையே பிபிசி உட்பட்ட ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை மையப்படுத்திய தமது சிறப்பு நேரலை நிகழ்சிகளை நடத்திவருகின்றன. பிபிசி தொலைகாட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளாகள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் அனைவரும் கறுத்த உடைகளில் தோன்றி வருகின்றனர்.
பரவும் வதந்திகள்
இதற்கிடையே ராணியின் உடல்நிலையை மையப்படுத்திய வதந்திகளும் பரவிவருகின்றன. ராணி எலும்புமச்சை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதான உறுதிப்படுத்தப்படாத செய்தி கடந்தமாதம் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
கடந்த யூலை மாதம் முதல் ராணி தமது ஸ்கொட்லாந்து பல்மோரல் கோட்டையில் ஓய்வில் தங்கியிருப்பதும் உடல்நிலை காரணமாக அவர் லண்டன் பக்கிங்காம் அரண்னைக்கு திரும்பவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது
