இனப்பிரச்சினை தீர்வே வடக்கு மற்றும் தெற்கிற்கு சிறந்தது - நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் நாயகம்!
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல்களும் இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது எனவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஜெனிவாவில் நாம் முன்வைத்த உடகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.
கோட்டாபய நியமித்த ஆணைக்குழு

மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறிமுறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்தபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போதைய அதிபர் கூறியதற்கமைய, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார்.
இதற்கு முன் இருந்த ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய இப்பொறிமுறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சில படைப்பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு

எவ்வாறானாலும் அதுபோன்றதொரு ஒழுங்குமுறையை இதுவரை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது. உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம். இந்தக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
