புலம்பெயர்வோருக்கு பிரித்தானியாவில் புதிய சிக்கல்: தீவிரமான அரசியல் கொள்கைகள்
பிரித்தானியாவில் குடியேற்றம் கணிசமாக குறைந்துள்ள போதிலும், பெரும்பாலான மக்கள் அது அதிகரித்ததாக நம்புவது புலம்பெயர்வோருக்கு புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது.
பிரித்தானியாவின் முன்னணி ஊடக நிறுவனம் மேற்கொண்ட பிரத்யேக கருத்துக்கணிப்பு, குடியேற்ற விவகாரத்தில் உண்மை நிலவரத்துக்கும் பொதுமக்கள் பார்வைக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை வெளிப்படுத்துகிறது.
2025 ஜூன் மாதம் முடிவடைந்த ஆண்டில், இங்கிலாந்தின் நிகர குடியேற்றம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்து 2.04 இலட்சமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அரசியல் அணுகுமுறை
ஆனால் “More in common" அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், 67% வாக்காளர்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளதாக நம்புவதாக தெரிவித்தனர்.

மேலும் Reform UK ஆதரவாளர்களில் 80% பேர் குடியேற்றம் வளர்ந்ததாகக் கூறியுள்ளனர். இந்த தவறான பார்வை காரணமாக, புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகள் மேலும் கடுமையாகின்றன.
இதன்படி உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், “ஒரு தலைமுறைக்குப் பிறகு மிகப்பெரிய அகதி சீர்திருத்தம்” எனக் கூறி, அகதிகளுக்கு குடியுரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு, குடும்ப மீளச்சேர்க்கை கட்டுப்பாடு, சொத்துப் பறிமுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் தொழிற் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்தாலும், குடியேற்றத்தை கட்டுப்படுத்த அரசின் மீது மக்களின் நம்பிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கருத்துக்கணிப்பில், 74% வாக்காளர்கள் குடியேற்ற விவகாரத்தில் அரசுக்கு மீது குறைந்த அல்லது எவ்வித நம்பிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
தொழிற் கட்சி ஆதரவாளர்கள்
குறிப்பாக, தொழிற் கட்சி ஆதரவாளர்களிடையே நம்பிக்கை 17% வீழ்ச்சியடைந்துள்ளது.

More in common அமைப்பின் இயக்குநர் லூக் ட்ரைல், “எண்ணிக்கைகள் குறைந்தாலும், மக்கள் நம்பிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. இதுவே அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது” என கூறியுள்ளார்.
புலம்பெயர்வோருக்கு எதிரான பார்வையை அதிகரிப்பதில், சிறிய படகுகள் மூலம் வரும் அகதிகள் தொடர்பான விவகாரம் முக்கிய காரணமாக உள்ளது.
2025ஆம் ஆண்டில் 43,000 பேர் இவ்வழியில் வந்திருந்தாலும், இது மொத்த குடியேற்றத்தின் 5% க்கும் குறைவானதாகும்.
இருந்தாலும், 79% மக்கள் அரசின் முக்கிய கவனம் இந்த படகுகளைத் தடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக IPPR நிறுவனத்தின் மார்லி மோரிஸ், “புலம்பெயர்வோருக்கு எதிரான சந்தேகம் மற்றும் பயம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனால் உண்மை நிலவரம் தெரிய வந்தாலும் கருத்து மாற்றம் தாமதமாகும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தொழிற்கட்சி எம்.பி. கிம் ஜோன்சன், “ரீபார்ம் கட்சியைப் போல கடுமையான மொழியைப் பயன்படுத்துவது, இனவெறியை ஊக்குவித்து, வேலை விசாக்கள் குறைவதன் மூலம் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு துறைகளை நெருக்கடிக்கு தள்ளுகிறது” என எச்சரித்துள்ளார்.
மொத்தத்தில், குடியேற்ற எண்ணிக்கை குறைந்தாலும், மக்கள் பார்வை மாறாத நிலையில், புலம்பெயர்வோர் அரசியல், சமூக மற்றும் சட்ட ரீதியான பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |