மகிந்த ராஜபக்சவின் ஊழல்கள் - உடனடி விசாரணைக்கு கோரிக்கை..!
மகிந்த ராஜபக்சவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம்(05) ரெலோ இயக்கத்தின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஐ.எம்.எப் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
அதிலும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஆகவே மகிந்த ராஜபக்ச குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக் கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதை அதிபரிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம்.
அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
தமிழர்களின் பூர்வீக நிலங்கள்
ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டிலே முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்ய முடியும். ஊழல் என்பது கொழும்பில் மட்டுமல்ல மகிந்த ராஜபக்ச மட்டும் அல்ல சிறிலங்கா அரசு கொழும்பிலிருந்து ஒரு சில அதிகாரிகள் ஊடாக வடக்கு கிழக்கிலே குறிப்பாக கொழும்பு உட்பட இலங்கை பூராக சில அதிகாரிகளூடாகவும் ஊழல் விடயங்களில் ஈடுபடுகின்றனர்.
இவையும் விசாரிக்கப்பட வேண்டும்.நாட்டின் அதிபர் இனப்பிரச்சனைக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்க தொடங்கி இருக்கிறார்.
எங்களை பொறுத்த வரையில் தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை அதிபரிடமே நாங்கள் கேட்கின்றோம்.
வடக்கு கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்களமாக இருக்கலாம்.
இனப்பிரச்சனைக்கு தீர்வு
இப்படி திணைக்கலங்களிடம் அதிகாரங்களை கொடுத்துவிட்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும். எங்களை பொருத்தவரையில் இந்த மண்ணை மீட்பதற்காகத்தான் பல போராளிகள் தங்களுடைய உயிரை கொடுத்தார்கள்.
பொதுமக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தார்கள். இப்படி எங்களுடைய பூர்வீக மண் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த வடக்கு கிழக்கு மண் படிப்படியாக தமிழர்கள் பூர்வீகம் இல்லாத ஒரு நிலமையை இந்த திணைக்களங்களுடன் இணைந்து இந்த அரசாங்கமும் திட்டமிட்ட செய்து வருகின்றது.
இப்படியான ஒரு சூழல் இருக்கு மட்டும் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்வியாகவே இருக்கின்றது.
ஆகவே வெறும் வார்த்தைகளில் அதிபர் அவர்கள் தீர்வு தீர்வு என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எங்களுடைய வடக்கு கிழக்கில் இருக்கின்ற மகாவலி வலயம் போன்று காணப்படுகின்ற திணைக்களங்களின் ஆதிக்கத்தை நிறுத்தி, தமிழ் மக்களுடைய காணிகளை அவர்களுக்கு ஒப்படைத்து, குறிப்பாக இராணுவத்திடம், கடற்படையிடம், இருக்கிற மக்களுடைய காணிகளை ஒப்படைத்து இந்த இக்கட்டான சூழலிலை தவிர்த்து செய்யப்படுகின்ற பேச்சு வார்த்தை தான் நல்ல தீர்வை கொடுக்கும் நல்ல ஒரு சமிஞ்சையாக இருக்கும்.
மக்களைத் ஏமாற்றுகின்ற செயல்
இந்த விடயங்களில் கவனம் செலுத்தாது ஒரு வருடத்திலேயே தீர்வு கிடைக்கும் என்று சொல்வது மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயலாகவே இருக்கும்.
மக்கள் நன்றாக நிதானமாக இருக்கிறார்கள். தொடர்ந்து இப்படி சொல்வதை மக்கள் நகைச்சுவையாக தான் பார்ப்பார்களே தவிர நம்பி சிந்திக்க மாட்டார்கள்.
தொடர்ச்சியாக இப்படியான விடயங்களை பேசுவதை விட்டு அதிபர் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.” எனவும் தெரிவித்தார்
